எவரும் காணாமற்போகவில்லை என்றால் அப்படியொரு அலுவலகம் எதற்கு- மனோ கணேசன் கேள்வி

0
192

எவரும் காணாமற் போகாவிட்டால் காணாமல் போனோருக்கான அலுவலகம் எதற்கு என மனோ கணேசன் எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

எவரும் காணாமலாக்கப்பட வில்லை எனக் கூறும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலக தலைவரின் கூற்று விந்தையானது என தெரிவித்த அவர், அந்த தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே மனோ கணேசன் எம்பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,நாட்டில் எவரும் காணாலாக்கப்படவில்லை என்றால் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் எதற்கு? நாடாளுமன்றத்தில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அது தொடர்பான சட்டமொன்றைக் கொண்டுவந்து அலுவலகத்தை ஸ்தாபித்துள்ளோம். தற்போது ஆளுங்கட்சியில் இருப்பவர்களே அப்போது அதனை எதிர்த்தார்கள். மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் நாம் கிளை அலுவலகங்களை திறந்து வைத்தோம்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை எங்களால் மேற்கொள்ள முடியாதளவுக்கு அப்போது எதிர்க்கட்சியினர் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள். எனினும் நாம் அவ்வாறு செயல்படவில்லை.

1988, 1989, 2000ஆம் ஆண்டுகளில் பலர் வடக்கு, கிழக்கு, தெற்கிலிருந்தும் காணாமலாக்கப்பட்டனர். இந்த சாபம், பாவத்தை நாட்டிலிருந்து துடைத்தெ றியவே நாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தோம். அந்த விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைப்புகளை வழங்குகிறோம்.

ஆனால் முதலில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டியது அவசியம். இதுபோன்ற தலைவரை வைத்துக்கொண்டு எவ்வாறு அந்த அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here