எவ்வாறான நெருக்கடியில் வந்தாலும் இந்த நாட்டுக்கு தொன்று தொட்டு சோறு போடும் சமூகம் என்றால் அது பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் என்பதனை எவரும் மறந்துவிடக்கூடாது, என அறிஒளி பவுண்டேசனின் தலைவர் அம்மாசி நல்லுசாமி தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தோட்ட பாடசாலைகளின் கல்வியினை மேம்படுத்துவதற்கு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தால் பெறுமதியான போட்டோ பிரதி நகல் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை 29 ம் திகதி அறிஒளி பவுண்டேசனின் தலைவர் அம்மாசி நல்லுசாமி அவர்களின் தலைமையில் கையளிக்கப்பட்டன.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று ஆடைத் தொழிலாக இருக்கட்டும்,மாணிக்கல் வியாபாரமாக இருக்கட்டு சுற்றுலா துறையாக இருக்கட்டும் எல்லா துறைக்ளும் முடங்கி போய் உள்ளன. ஆனால் 200 வருட காலமாக இந்த நாட்டுக்கு சோறு போடும் சமூகமாகவும் எந்த சோதனைகள் வேதனைகள் வந்தாலும் பொருளாதாரத்தினை ஈட்டித்தரும் சமூகமாக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகமே காணப்படுகின்றன.
ஆனால் இன்று கொழும்பிலிருந்து எங்கு சென்றாலும் இந்த சமூகம் பின்தங்கிய சமூகம் என ஏளனம் செய்கிறார்கள. நாங்கள் ஒரு போதும் பின் தங்கவில்லை இன்று எங்கள் சமூகத்தில் வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பேராசிரிகள் வழக்கறிஞர்கள் என பல்துறை கல்வி சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இன்றும் வளர்ச்சிப்பாதையினை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆகவே எம்மை ஏளனமாக பேசுவதற்கு அனுதிக்கக்கூடாது.
ஒரு சமூகம் மாற்றம் பெற வேண்டும் என்றால் அதனை கல்வியால் மாத்திரம் தான் செய்ய முடியும் என்பதனை நான் நன்கு உணர்ந்தவன் நான் படித்த அறிவாளி கிடையாது ஆனால் பல கல்வி சமூகத்துடன் தொடர்பு பட்டிருப்பதனால் இதன் பெறுமதியினை உணர்கின்றேன்.ஆகவே தான் கடந்த இருபது ஆண்டுகளாக கல்வி மேம்பாட்டிக்கும் அறிநெறி வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றோம்.
மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பல நல்ல உள்ளங்கள் இன்று எம் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து வருகின்றனர் அதில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் அறங்காவலரும் தலைவருமான மருதப்பிள்ளை கோபாலகிருஸ்ணன், கணகரத்தினம் வரதீஸ்வரன் போன்றவர்களை மறந்து விடக்கூடாது இது போன்று பலர் எமது சமூகத்திற்கு உதவ முன்வருவார்கள் அவர்கள் அனைவரினதும் உதவியினை பெற்று இந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்