ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் குறித்து இந்து கலாச்சார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு உமா மகேஷ்வரன், பிரதமரின் ஆன்மீக இணைப்பாளர் பாபு சர்மா ,அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் செயலாளர் கணேஷமூர்த்தி, சபரிமலை ஒன்றிய குருக்கள் K.ரவீந்திர குருசாமி மற்றும் ஐயப்ப குருசங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கான வீசா தற்போது நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வீசா வழங்குவதற்கான விசேட நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய உதவி உயர்ஸ்தானிகளை தொடர்பு கொண்டு, வீசா வழங்குவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் முதல் வீசா வழங்குவற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. கேரளா மாநிலத்திற்கு விமான சேவை இயங்காத சூழ்நிலையில் சபரிமலை செல்வதற்கு தமிழகம் ஊடாக வெகுதூரம் சாலைவழியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் மீண்டும் விமான சேவை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை செந்தில் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக விமானத்துறை அமைச்சரை செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற விமானத்துறை அமைச்சர் கொவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தப்புரம் மற்றும் கொச்சின் ஆகிய இரண்டு விமானநிலையங்களுக்கும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து ஐயப்பன் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலை செல்வதை சபரிமலை தேவஸ்தானத்தால் கட்டாயம் ஆக்கப்பட்டது. இவ் ஒன்லைன் முறைமையை இலகுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களைமுன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக கலாச்சார செயலாளரை செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டு ஒன்லைன் முறைமையை செயற்படுத்த இலகுவான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.