ஐரோப்பிய நாடுகளில் வேலை – இலங்கையர்களிடம் 200 மில்லியன் ரூபாய் மோசடி

0
13

ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 200 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவமுள்ள மாவனெல்லைச் சேர்ந்த ஒருவரும், கடவத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் அடங்குவர்.

மாவனெல்ல மற்றும் இம்புல்கொடவில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி, நீர்கொழும்பில் சுமார் 1.5 ஆண்டுகளாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் செல்லுபடியாகும் உரிமத்துடன் இயங்கும் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த நிறுவனம் ஹங்கேரி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலைகளை வழங்குவதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள தனிநபர்களிடமிருந்து பெரும் தொகையை பெற்றுள்ளது.

இருப்பினும், பணம் பெற்றுக்கொண்ட போதிலும், எந்த வேலையும் வழங்கப்படவில்லை என்பதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இதுவரை 20 முறையான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டமை கண்டுப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் பகிரங்கமான பின்னர், நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிதி மேலாளர் ஆகியோர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய புலனாய்வுக் குழு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, அவர்களுக்குப் பயணத் தடையையும் நீதவான் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here