ஐ.ம.ச – ஐ.தே.க. பேச்சுவார்த்தை; சஜித் தரப்பு குழு அறிக்கை – புதனன்று கட்சி முகாமை பிரிவுக்கு

0
3

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயலாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கான பரிந்துரைகளை தயார் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை 22ஆம் திகதி கட்சி முகாமைத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்ததுடன் குழு உறுப்பினர்களாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவுக்காக இருத் தரப்பிலும் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கிடையில் இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவில்லை. இருந்தபோதும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாங்கள் நியமித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அதாவது நாளை மறுதினம் கட்சி முகாமைத்துவ குழுவுக்கு ஒப்படைப்போம். பேச்சுவார்த்தை சாதகமாக அமையும் என்றே நம்புகிறோம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோர் இந்த மூன்று பேர் கொண்ட குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here