அபிவிருத்திக்காக பெற்றுக் கொடுக்கப்படும் நிதி திறைசேரிக்கு திரும்பிப் போகாமல் அதனை முழுமையாக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கும் உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கையின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பொருளாதார திட்டமிடல்கள் அமைச்சின் நிதியீட்டத்தின் சீரமைக்கப்படவுள்ள பூண்டுலோயா ஹெரோ மற்றும் சீன் தோட்டப் பாதைகளுக்கான பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, சீன் தோட்ட மேற்பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டு மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்ளியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்படும் ஒரு கோடி ரூபா பன்முப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்ட நிதிக்கு மேலதிகமாக பல்வேறு அமைச்சுக்களிடம் நிதியினைப் பெற்று பிரதேச செயலகங்கள் ஊடாக அத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்கின்றோம். கிராமிய மட்டங்களில் உள்ள அபிவிருத்தி குழுக்கள், சங்கங்கள் ஊடாக அந்த நிதிக்குரிய அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு. மக்களினால் ஒன்றிணைந்த அத்தகைய குழுக்கள் சங்கங்கள் உரிய காலத்தில் அவற்றை நிறைவு செய்து பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஊருக்குள் இருக்கக்கூடிய உள் முரண்பாடுகள் காரணமாக அவற்றை மேற்கொள்ள தாமதமானால் அந்தப் பணம் திறைசேரிக்கு திரும்பிப் போகும் சந்தர்ப்பம் உள்ளது. அப்போது அரசியல்வாதிகள் மீதே குறை கூறுவார்கள். எனவே அபிவிருத்திப் பணியில் மக்கள் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்