ஒரு வகுப்பறையின் மாணவர்களின் எண்ணிக்கையை 25 முதல் 30 வரை குறைக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. 50 அல்லது 60 மாணவர்களைக் கொண்ட நெரிசலான வகுப்பறைகளில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான வைத்தியர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
காலியில் தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்காக நேற்று
நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
உத்தேச புதிய சீர்திருத்தங்கள் பாடத்திட்ட புதுப்பிப்புகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், குறித்த சீர்திருத்தம்ஆசிரியர் தொழில்முறையை மேம்படுத்துதல், கல்வி நிர்வாகத்தை மறுசீரமைத்தல் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
“இது நாங்கள் தனிப்பட்ட லாபத்திற்காகச் செய்யும் ஒன்றல்ல; இது ஒரு தேசிய பொறுப்பு. இந்த சீர்திருத்தங்கள் நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்டன,,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.