அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஐனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கையினுள் “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்பதை செயற்படுத்தும் சட்ட வரைபை தயாரிக்க பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்பது கேலிக்கூத்தாகவே உள்ளது என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமிப்பது “குரங்கின் கையில் பூமாலை” கொடுத்தது போலவே தான் உள்ளது.இதிலும் மிகவும் வேதனைக்குறிய விடயம் எதுவெனில் இச் செயலணிக் குழாமில் தமிழ் அங்கத்துவம் எதுவும் இடம்பெறவில்லை என்பதே.
தற்போதுள்ள குழு முரண்பாடாக உள்ளது எனவும் தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் உள்ளது என்றுதான் புதிய ஒரு குழுவை அமைக்க வேண்டிய கட்டாயம் நிலவியது.ஆனாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவின் நோக்கம் என்னவாக இருக்கப்போகின்றது?
நாம் எதையும் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இருந்துள்ளார் என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.அது யாவரும் அறிந்ததொன்றாகும்.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழிகாட்டலின் கீழ், இலங்கையிலுள்ள பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டது.
அத்துடன், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளை கண்டித்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் பெரிய போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளை கலகொடஅத்தே ஞானசார தேரர் ஈடுபட்டு வருவதாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு கூறிக்கொண்டே செல்லும் அளவிற்கு அடுக்கடுக்காக குற்றத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியின் தலைமையில் இச் செயலணி அமைக்கப்பட்டது சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.இச் செயலணியில் தமிழ் அங்கத்துவம் இல்லை என்பதும் கண்டனத்துக்குறிய விடயமாகும்.எனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்திருந்தார்.