ஒரே வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியின் பணப்பையை கொள்ளையிட்டு மோசடி செய்த தாதி கைது

0
133

விசாரணைகள் நடைபெற்று வந்த நேரத்தில் தான் கோரிய பணம் வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நிதி நிறுவனம் ஒன்று முறைப்பாட்டாளரான தாதிக்கு அறிவித்துள்ளது.
பாணந்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சையில் சேவையாற்றும் தாதி ஒருவரின் பணப்பையை கொள்ளையிட்டு அதில் இருந்த ஆவணங்களை பயன்படுத்தி கடனை பெற்றுக்கொண்ட அதே வைத்தியசாலையில் பணிப்புரியும் தாதி ஒருவரை தாம் நேற்று கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வைத்தியசாலையில் சேவையாற்றும் அம்பாலங்கொடை பிரதேசத்தை சேர்ந்த தாதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான தாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி தனது பணப்பை காணாமல் போனதாக தாதி முறைப்பாடு செய்திருந்ததுடன் அது சம்பந்தமாக பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகள் நடைபெற்று வந்த நேரத்தில் தான் கோரிய பணம் வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நிதி நிறுவனம் ஒன்று முறைப்பாட்டாளரான தாதிக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களை ஆய்வு செய்ததில் ஒரே வைத்தியசாலையில் பணிப்புரியும் தாதி ஒருவர், முறைப்பாட்டாளரான தாதியின் ஆவணங்களை சமர்பித்து வங்கி கணக்கொன்றை ஆரம்பித்துள்ளது தெரியவந்ததை அடுத்து அந்த தாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளையிட்ட பணப்பையில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இரண்டு சிம் அட்டைகளை பெற்று அதனை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் கடனை பெற்றுக்கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள தாதி கூறியுள்ளார்.

சந்தேக நபரான தாதி கொள்ளையிட்ட பணப்பை, அதில் இருந்து இரண்டு கடன் அட்டைகள் மற்றும் வீட்டுச் சாவி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here