கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும், இதற்கு அரசின் நிதியுதவி வழங்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நெடுஞ்சாலையின் மீதமுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியுதவி தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் IV ஆம் கட்டத்தின் கீழ் குருநாகல் முதல் தம்புளை வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்கான நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முழுமையான நன்மைகளைப் பெறுவதற்கு IV ஆம் கட்டத்தை முழுமையாக நிறைவு செய்வது அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு அணுகலை வழங்கும் விரிவான மற்றும் உயர்தர வீதி வலையமைப்பின் தேவையை பூர்த்தி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.