கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்

0
42

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு சாலிந்து மற்றும் ஷிரான் பாசிக் தரூன் உள்ளிட்ட பல பாதாள உலகக் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணி, தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள கெஹல்பத்தர பத்மேவின் கும்பலின் முக்கய ஒருவராக கருதப்படும் தரூன் என்ற பாதாள உலக நபருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்கிஸை பகுதியில் உள்ள கடற்கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஹோட்டலை இடித்ததற்காக பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்தவரும் இந்த சட்டத்தரணி தான் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த ஹோட்டலானது ஷிரான் பாசிக் என்ற பெரிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த சட்டத்தரணி, நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலகத் தலைவர் என்று கூறப்படும் பாணந்துறை போதைப்பொருள் கடத்தல்காரர் குடு சாலிந்து சார்பாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துபாயில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான தரூன் என்பவரின் வேண்டுகோளின் பேரில், நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்கு தேவையான வசதிகளை இந்த சட்டத்தரணி இஷாரா செவ்வந்திக்கு வழங்கியதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையில் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு சட்டத்தரணி தெரிந்தே உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சட்டத்தரணி பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here