கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை ஆறு மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.