கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுடன் அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால், கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், கனடா அமெரிக்காவுக்குள் சீனப் பொருட்களை அனுப்பும் “டிராப் ஆஃப் போர்ட்” ஆக மாறினால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என டரம்ப் தெரிவித்தார்.
சீனப் பொருட்கள் அமெரிக்க வரிகளை தவிர்க்க கனடாவை இடைநிலைய துறைமுகமாக பயன்படுத்தும் நிலையையே
“ட்ராப் ஆஃப் போர்ட்” (Drop-off port) என கூறுகிறார்.
மேலும், சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் கார்னியின் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ஆனால், “அமெரிக்காவுடன் கனடாவின் வர்த்தக உறவுகளை கையாளும் கனேடிய அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்ய எந்த முயற்சியும் இல்லை என்று விளக்கமளித்தார்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது சில முக்கிய கட்டண பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மட்டுமே என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் கார்னி உரையாற்றிய பின்னர், கனடா–அமெரிக்க உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தனது உரையில், அச்சுறுத்தல்களுக்கு பதிலாக உலக நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என கார்னி வலியுறுத்தினார்.




