கனடாவுடன் நடைபெற்று வந்த அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் பெயரை போலியாக பயன்படுத்தி சுங்க வரி எதிர்ப்பு விளம்பரத்தை கனடா வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவர்களின் மோசமான நடத்தையைக் கருத்தில் கொண்டு, கனடாவுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இத்துடன் நிறுத்தப்படுகின்றன என டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் அறிவித்துள்ளார்.
கனடா ஒரு போலியான விளம்பரத்தில் ரீகனின் பெயரையும் குரலையும் தவறாக பயன்படுத்தியுள்ளது என ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம், கனடா பிரதமர் மார்க் கார்னி அக்டோபர் 7 அன்று வெள்ளை இல்லத்தில் டிரம்பைச் சந்தித்துப் பேசிவிட்டு, அமெரிக்க சுங்க வரிகளை தளர்த்துமாறு கோரிய இரு வாரங்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, 1987 ஏப்ரல் மாதம் ரீகன் வழங்கிய வர்த்தக உரையின் ஒலி மற்றும் காணொளி பகுதிகளை வெட்டிச் சேர்த்து, தவறான விளம்பரமாக வெளியிட்டுள்ளது.
இது, ரீகனின் உரையின் உண்மையான பொருளை தவறாக பிரதிபலிக்கிறது என்றும், சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
டிரம்ப், அந்த விளம்பரம் அமெரிக்க உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கவுள்ள உலகளாவிய சுங்க வரி தீர்ப்பைத் தாக்கம் செய்யும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த திடீர் முடிவு, அண்மையில் டிரம்ப் “உலகத் தரம் வாய்ந்த தலைவர்” என புகழ்ந்த கார்னிக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், அப்போது டிரம்ப் எந்தவித சுங்க தளர்வையும் அறிவிக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையிலான மொத்த எல்லை வர்த்தகத்தின் சுமார் 85% தற்போது சுங்கமின்றி நடைபெறுகிறது. இது USMCA எனப்படும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுகிறது.
ஆனால் டிரம்ப் அறிமுகப்படுத்திய உலகளாவிய துறை சார்ந்த சுங்க வரிகள் – குறிப்பாக இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டவை – கனடாவை கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் விளைவாக வேலை இழப்புகள், தொழில் நெருக்கடிகள் போன்றவை உருவாகியுள்ளன.




