கலஹா வைத்தியசாலையின் பதற்ற நிலை – வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்!!

0
254

வைத்தியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள் 29.08.2018 அன்று சமுகமளிக்காமையால் கண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. தெல்தோட்டை தோட்டப் பகுதியைச் சேர்ந்த மூன்று வயதுடைய சங்கர் சவீ என்ற குழந்தையொன்றை சுகயீனம் காரணமாக பெற்றோர் 28.08.2018 அன்று கலஹா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.கடும் சுகவீனமுற்றிருந்த குழந்தையை சுமார் இரண்டு மணித்தியாலங்களாக வைத்தியர்கள் கவனிக்கவில்லை எனத் தெரிவித்து பெற்றோர் பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குழந்தை உயிரிழந்து விட்டதாக பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பிரதேச மக்கள் கலஹா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் வைத்தியசாலை வளாகத்திற்குள் பிரவேசித்து அமைதியின்மையை தோற்றுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வைத்தியசாலையின் பொருட்கள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியதோடு, வைத்தியர்களின் வாகனத்தையும் எதிர்ப்பு தெரிவித்த பிரதேச மக்கள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலஹா வைத்தியசாலையில் பணியாற்றும் மூன்று வைத்தியர்களை பதவி நீக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த வைத்தியசாலையின் வைத்தியருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததனால் வைத்தியருக்கு பொலிஸ் உடையை அணிவித்து பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து பொலிஸ் வாகனத்தின் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

பிறகு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட மக்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள் 29.08.2018 அன்று சமுகமளிக்காமையால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here