ஹட்டன் , நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் நேற்றிரவு (22) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆசிரியரின் சடலம் லோகி தோட்டத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று(23) பிற்பகல் 2 மணியளவில் சடலத்தை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை – லோகி தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான ஆசிரியர் மகேஷ்வரன், லிந்துலை சென். கூம்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்களின் கணித பாட சித்திக்கு காரணமாக திகழ்ந்தவராவார்.
இதனிடையே, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் மரமொன்றை வெட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(22) மாலை சந்தேகநபர்கள் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.