நாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக களனி மற்றும் ஜின் கங்கையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை உயரவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.
நேற்றைய தினம் காலி மாவட்டத்தின் தவலம பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
களனியாற்றிலும் ஒருசில இடங்களில் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதை நீர்ப்பாசனத் திணைக்களம் அவதானித்துள்ளது. எனினும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு நீர்மட்டம் உயரவில்லை.
எனினும் பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாகவும், விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது பாதுகாப்பானது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.