காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் தேவையை பூரத்தியாக்கும் – ஆறுமுகன் தொண்டமான்!!

0
160

ஒரு கட்சியில் தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவியை ஒருவர் வகிக்க முடியாது என தேர்தல் ஆணையகம் அறிவித்ததையடுத்து காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் 105வது ஜனன தினத்தில் தான் வகித்த பொது செயலாளர் பதவியை இராஜனமா செய்து தேசிய சபை கூடப்பட்டு அப்பதவியை காங்கிரஸின் நீண்ட நாள் உறுப்பினரான திருமதி. அனுஷியா சிவராஜாவுக்கு வழங்கப்பட்டது என தெரிவித்த காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் செயலாளர் உப பதவியை ஜீவன் தொண்டமானுக்கு வழங்க தேசிய சபை ஏகமனதாக தீர்மானித்தது என தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

செயலாளர் பதவிக்கு திறமைசாலிகள் பலர் இருக்கின்றார்கள். அந்தவகையில் நாம் ஆராய்ந்து பார்த்த போது இ.தொ.காவில் நீண்டகால அபிமானியாக இருந்து வந்தவரும், ஐயாவின் காலத்தில் நிதி காரியதரிசியாக செயல்பட்டவருமான அனுஷியா சிவராஜாவின் தந்தை காணப்பட்டதால் அவரின் புதல்வியான திருமதி.அனுஷியாவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் பிரதி பொது செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது. இதை சிலர் குடும்பத்தினரை காங்கிரஸிற்குள் கொண்டு வந்துவிட்டார் என சொல்லுவார்கள். ஆமாம் பதவியை கொடுத்து விட்டேன். என்ன செய்ய முடியும் என இதன்போது கேள்வி ஒன்றை எழுப்பினார்.

காங்கிரஸை வழி நடத்துவதற்கும், அதன் சேவையை முன்னெடுப்பதற்கும் திறமையானவர்கள் முன்வரும் போது அவர்களுக்கு பதவி வழங்குவது காங்கிரஸின் கொள்கையாகும். அந்தவகையில் மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் ஒரு பெண் தொழிலாளியின் பிள்ளை என்பதையும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ஒரு இளைஞன் என்பதையும் சுட்டிக்காட்டிய இவர், இவர்களுக்கு திறமை இருப்பதால் தான் காங்கிரஸின் ஊடாக இப்பதவி வழங்கப்பட்டது.

மூன்று வருட ஆட்சி காலப்பகுதியில் எதிர்கட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்களோ அதை எமது மலையக மக்களுக்கும் நாமும் செய்து வருகின்றோம்.

தேசிய வீடமைப்பு மூலமாக வீடுகளை கட்டிக்கொடுத்து வருகின்றோம் எனவும் மேலும் பல திட்டங்கள் மக்களுக்கு செய்து கொடுக்கப்படுகின்றது. சிலர் குறை சொல்லி காலத்தை கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு இது ஒரு தொழிலாக மாறிவிட்டது. எந்த மேடையிலும் சரி அறிக்கைகளிலும் சரி. சிலர் ஆவனாவையும், காவனாவையும் பாவிப்பார்கள். ஆறுமுகன், காங்கிரஸ் என பாவிக்காவிட்டால் இவர்கள் அரசியல் செய்ய முடியாது.

காங்கிரஸை குறை சொல்லாமல் மேலே வரமுடியாது. சொன்னால் தான் மேலே வரலாம். தடுமாறி விழும் போது சிவனொளிபாதமலையிலிருந்து கீழ் விழுவதை நடப்பாகும்.

75 வருடம் ஆலமரம் போல் காங்கிரஸ் நிற்கிறது. அன்று ஐயா வாக்குரிமை வாங்கி கொடுக்காவிட்டால் வீதியில் தான் நின்றிருப்பார்கள். இந்த உண்மையை ஜீரனிக்க முடியாத சிலரும், இளைஞர்களும் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றார்கள்.

உண்மையில் தூங்குபவனை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது. எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும் ஐயா தலைமையில் வாக்குரிமை பெற்றது தான் உண்மை. அதேவேளையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யும். தேவைப்படுவதை வழங்கும். ஒற்றுமையாக வாழுவோம் என்றார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here