காசா நகரை இஸ்ரேல் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பான பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்தும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து அம்ச திட்டங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைதல்,பணயக் கைதிகளை விடுவித்தல், காசா பள்ளத்தாக்கின் பாதுகாப்பை இஸ்ரேலிய படையினர் பொறுப்பேற்றல், பாலஸ்தீன அதிகாரசபை அல்லது ஹமாஸ் இல்லாத மாற்று பாலஸ்தீன அரசாங்கத்தை அமைத்தல் ஆகியவை குறித்து இவற்றுள் உள்ளடங்கும்.
அத்துடன், மோதல் இடம்பெறும் பகுதிக்கு வெளியே உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காசாவை ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சட்டத்தைமீறும் எந்தவொரு செயலிலும் இஸ்ரேல் ஈடுபடக்கூடாது எனவும், அது மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.