பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிளங்கன் தோட்டத்திற்கு அருகில் உள்ள சுமார் 30 எக்டர் நிலப்பரப்பை வெளியாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து கிளங்கன் தோட்ட மக்கள் அட்டன் நோர்வூட் பிரதான வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை 06.08.2018 அன்று காலை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 150ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டனர்.
இவ் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளங்கன் தோட்டத்திற்கு அருகாமையில் காணப்படுகின்ற 30 எக்டர் நிலப்பரப்பு கிளங்கன் தோட்டத்திற்கு சொந்தமானது அல்ல எனவும், இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அட்டன் சமனலகம பிரதேசவாசிகள் 25 குடும்பங்களுக்கு வீடமைத்து வாழ்வதற்காக தலா ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் வீதம் பிரிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கும் இப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் மேலும் பலருக்கு இங்கு இடங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் சமனலகம பிரதேசவாசிகளுக்கு இவ்விடத்தில் வீடுகள் அமைக்க இடங்களை ஒதுக்கப்படுவதற்கு தமது ஆட்சேபனையை தெரிவிக்காத கிளங்கன் தோட்ட மக்கள் இவர்களை தவிர்த்த வெளியிடவாசிகளுக்கு காசுக்காக இடங்களை பகிர்ந்தளிப்பதை ஆட்சேபிப்பதாக தெரிவித்து இப்போராட்டத்தை நடத்தினர்.
அதேவேளையில் கிளங்கன் தோட்டத்தை ஒட்டியே இந்த காணி காணப்படுவதால் சமனலகம மக்களுக்கும் கிளங்கன் தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் 120 குடும்பங்களுக்கு இக்காணியை பகிர்ந்து விட்டு எஞ்சியிருப்பதை கிராம சேவக பிரிவுக்குட்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என வழியுறுத்தினர்.
அதேசமயத்தில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என அட்டன் நீதிமன்றத்தால் நோர்வூட் பொலிஸ் நிலையம் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றிருந்தமையும் குறிப்பிடதக்கது.
வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளாத தொழிலாளர்கள் மத்தியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் க.குழந்தைவேல் ஆகியோர் வருகை தந்து மக்களின் பிரச்சினையை கேட்டறிந்தமையும் மேலும் குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன், எஸ்.சதீஸ் , மு.இராமச்சந்திரன்