வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே இவ்வாறு உயிரிழந்தார்.
இரட்டையர்கள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார்.
மீள வந்து பார்த்த போது பாலகன் ஒருவரைக் காணவில்லை. வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றை பார்த்த போது குழந்தையை கிணற்றில் தவறி வீழ்ந்தமை கண்டறிப்பட்டது.
குழந்தையை உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
கட்டுக் கிணற்றை சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது.
அதில் ஏறிய போதே பாலகன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார்.