கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 40 பேர் கிணற்றுக்குள் விழுந்ததில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடிசா மாவட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
விடிசாவில் வியாழக்கிழமை மாலை கிணற்றுக்குள் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கிணற்றின் சுவர் இடிந்ததையடுத்து ,அடுத்தடுத்து 40 பேர் வரை கிணற்றிற்குள் தவறிவிழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
சிறுமி கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென சிறுமி கிணற்றில் தவறி விழுந்தார்.இதையடுத்து சிறுமியை மீட்க மீட்பு படை விரைந்து வந்ததுள்ளது அதற்குள் கிணற்றைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியுள்ளது. கிராமம் முழுக்க பரவிய தகவலால் அனைவரும் கிணற்றின் சுவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
அப்போது கிணற்றின் ஒரே சுவரில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்ததால் அது திடீரென சரிந்தது. இதனால் சுமார் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை 23 பேர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். 13 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகிறார்கள்.
கிணற்றில் விழுந்த சிறுமி உள்பட 17 பேரை மீட்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 10 பேர் வரை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.