ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு சமீபமாக உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளன இதனால் ஹட்டன் மல்லியைப்பூ தோட்டப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை கொட்டகலை கொமர்சல் பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்ள பிரதேசத்தில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்டுள்ள தீ காரணமாக அப்பிரதேசத்திலும் பல ஏக்கர் தீக்கிரையாகியுள்ளன இதனால் கொட்டகலை கொமர்சல் நேத்ரா பிளேஸ் சாந்திபுரம் சமாதானப்புரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றன.
குறித்த பிரதேசத்தில் தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச வாசிகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஏற்படவிருந்த சுற்றுப்புற சூழல் அழிவுகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
குறித்த தீ வைப்பு காணிகளை துப்பறவு செய்வதற்காகவும் காணிகளை ஆக்கிரமிப்பதற்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.மலையகப் பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுவதனால் தீ மிக வேகமாக பரவி பல ஏக்கர்கள் நாசமாவதுடன் எமது பிரதேசத்திற்கு உரித்தான அரிய வகை தாவரங்கள்,மற்று சிறிய உயிரினங்கள் ஆகியன அழிந்து போயிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் வனப் பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் காட்டு விலங்கள் உணவு மற்றும் நீர் தேடி மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வரலாம் எனவும் இதனால் இந்த விலங்குகளுக்கும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் வறட்சியான காலப்பகுதியில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்