குருந்தூர்மலை ஆக்கிரமிப்பு! – செந்தில் தொண்டமான் கண்டனம்.

0
200

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கத்தக்கதென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தமிழர்களின் பாரம்பரிய ஆலயமாகும். இப்பகுதியில் உள்ள 632 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழர்கள் காலந்தொட்டு விவசாயம் மேற்கொண்டு வந்தனர். 2018இல் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து முழுக் குருந்தூர் மலையும் தொல்பொருளியல் ஆய்வுப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆய்வுகளின் பெயரால் மக்களின் பிரசன்னம் தடுக்கப்பட்டது. இராணுவ படைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மக்கள் புகாத பகுதியாக மாற்றப்பட்ட குருந்தூர் மலையில் தொல்பொருள் சின்னங்கள் கண்டறியப்பட்டன. அவை பௌத்த சமயச் சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு,பௌத்த முத்திரை குத்தப்பட்ட சின்னங்களை அடிப்படையாக வைத்து ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழர்களின் பூர்வீக இடமாக திகழும் குருந்தூர்மலையை பௌத்த மயமாக்கும் நோக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும். குருந்தூர்மலை என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் என்பதற்கான அனைத்து சான்றுகளும் உள்ளன. மதவாத போக்கில் அரங்கேற்றப்படும் இந்த நடவடிக்கை மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது” எனவே இது தொடர்பாக அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here