அணித் தேர்வுகளில் பாரபட்சம் மற்றும் செல்வாக்கு செலுத்துவதாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட உதவி பயிற்றுவிப்பாளர் மொஹமட் சலாஹுதீன் நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரைத் தீர்மானிக்கும் இன்றைய இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அணியின் சமீபத்திய மோசமான செயற்பாட்டுக்குப் பின்னர், அவரது எதிர்காலம் குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான பின்னணியில் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரை தெரிவுசெய்வது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாக தலைமைத் தேர்வாளர் காசி அஷ்ரப் ஹொசைன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து வெளியிடப்பட்ட சில நாட்களின் பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அமினுல் இஸ்லாம், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மொஹமட் சலாஹுதீனை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டார்.
இந்தநிலையில், நேற்றைய ஊடக சந்திப்பில் இந்த விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மொஹமட் சலாஹுதீன், தேவைப்பட்டால் பதவி விலகுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.
சிறந்த ஒருவர் வந்தால், அது அணியின் நன்மைக்கானதாக இருக்கும் என தெரிவித்தார்.
27-28 ஆண்டுகளாகப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் தமக்கு போதிய தெளிவு உள்ளதாகவும் அவர் கூறினார்.