ஹப்புத்தளை – தங்கமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பின்னர் அவர் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் 65 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தார்.சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்ற பல்கலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உறுகுணை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் பொகவந்தலாவையில் மலைப்பகுதி ஒன்றில் முகாமிட்டிருந்த ஆறு பல்கலை மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.