இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது 15 மாத குழந்தையை தாக்க முயன்ற புலியிடம் சண்டையிட்டு போராடிய பெண் ஒருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சனா சௌத்ரி என்ற அந்த பெண் புலியுடன் வெறும் கைகளால் சில நிமிடங்கள் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த பெண்ணும் அவருடைய 15 மாத ஆண் குழந்தை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 04) இச்சம்பவம் நடைபெற்றது.
புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவற்றால் தாக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் பிபிசி தமிழிடம் பேசுகையில், புலிகளை தவிர்த்து யானைகளும் தங்கள் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் என தெரிவித்தனர்.