கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கென்யாவில் 35 ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் நேற்று (7) கென்ய தலைநகர் நைரோபியில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன்போது அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி வில்லியல் ரூடோ பதவி விலகுமாறு அவர்கள் முழக்கமிட்டனர்.
பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸார் முன்னேறவிடாமல் தடுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய, பொலிஸார் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கென்யாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் கென்யாவில் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால்,அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.