நியாயமற்ற முறையில் மக்களின் மீது வரிக்கு மேல் வரி விதிக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று மாபெரும் போராட்டத்தில் களமிறங்கவுள்ளது.
இதன்பிரகாரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையம் வரைக்கும் வருகை தரவுள்ளனர்.
இந்த எதிர்ப்பு பேரணியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எம்.பி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் தொழிற்சங்க சங்கத்தின் தலைவர் லால் காந்த உள்ளிட்ட பலரும் களமிறங்கவுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் நியாயமற்ற முறையில் வரி விதிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சுமத்தி வருகின்றது. இதன்பிரகாரம் கார் மற்றும் மூச்சக்கர வண்டிகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் சிமெந்து பொதியொன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைலேயே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கவுள்ளது.