கேகாலை – அரநாயக்க – ஹெம்மாத்தகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பட்டது

0
155

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் – தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நேற்று 20ம் திகதி அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு தலைமை தாங்கி வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பங்குபற்றலுடன், இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், ரஞ்சித் சியம்லாபிட்டிய, தாரக பாலசூரிய, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோவெக், இலங்கைக்கான துருக்கி தூதுவர் ராகிபே டெமட் செகெர்சியோக்லு, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ராஜிகா விக்ரமசிங்க, சாரதி துஸ்மந்த, சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, அதிகாரிகள் உட்பட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், விசேட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கிடைக்கச் செய்த ஜனாதிபதி, நீர் அமைப்பையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் குடிநீர் திட்ட வளாகத்தை பார்வையிட்டார்.

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பிரதேசங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்வதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த திட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இந்த திட்டத்திற்காக இலங்கை அரசு ரூபா 3,847 மில்லியன் நிதியை வழங்கியிருந்ததுடன் நெதர்லாந்து அரசு 81.95 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்கியுள்ளது.

இதற்கான ஆரம்ப நிர்மாணப் பணிகள் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலிலும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்பார்வையிலும் Ballast Nedam International Projects B.V. என்ற ஒப்பந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் புதிய வீட்டு இணைப்புகளுக்கு 25,200 குடிநீர் குழாய்கள் நீர் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே உள்ள 27,100 நீர்வழங்கல் இணைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் 52,300 குடும்பங்களை சேர்ந்த 169,000 மக்கள் குடிநீர் வசதிகளை பெற்றுள்ளார்கள். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 21,000 கனமீற்றர் கொள்திறனுள்ள புதிய நீர் சேகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதுடன் திட்ட பிரதேசங்களில் 7 புதிய நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here