கேகாலை மாவட்டத்தில் மேலும் 636 இடங்கள் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளை சேர்ந்த 2800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவது கட்டாயமானதொன்று எனவும் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரநாயக்க, புலத்கோபிட்டிய, தரணியகல, யட்டியந்தோட்டை, வரகாபொல மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் தங்களின் இருப்பிடங்களைவிட்டு வெளியேறுவதில் அதிருப்தி தெரிவிப்பதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்த நேரத்திலும் அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானத்துடன் செயற்படுது கட்டாயமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.