உழவர் திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் (15.01.2022) மலையகத்தில் பட்டிப் பொங்கல் மிகவும் சிறப்பாக கால்நடை வளர்ப்பாளர்களால் கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் மலையகத்தில் பிரதான நிகழ்வு கொட்டகலை ரொசிட்டா தேசிய பண்ணை வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பட்டிப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி தூதுவர் திருமதி.ஆதிரா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரமேஷ்வரன், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பிரதம அதிதிகள் பொங்கல் ஊட்டி நிகழ்வை சிறப்பித்தனர்.
(க.கிஷாந்தன்)