நாட்டில் மற்றும் மலையகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அன்றாடம் வேலை செய்பவர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தினை இழந்து பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களை சூறையாடும் வகையில் ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் தோட்ட மக்களை இலக்கு வைத்து சில வர்த்தகர்கள் கொள்ளை விலையில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த நகரங்களில் உள்ள ஒரு சில கடைகளில் சீனியின் விலையினை அரசாங்கம் நிர்னைய விலையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்ற போதிலும் சீனி ஒரு கிலோ 180 ரூபா தொடக்கம் 240 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் இது தொடர்பாக பாவனையாளர் கேட்டால் தாங்கள் அதிக விலைக்கு கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனி மாத்திரமின்றி அத்தியவசிய பொருட்கள் பலவற்றினையும் இவ்வாறு தன்னிச்சையான விலையில் விற்பனை செய்து வருவதாகவும் இது குறித்து உரியவர்கள் கவனமெடுத்து இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் முழு நாடும் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பல குடும்பங்கள் தனது நாளாந்த உணவினை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் கவலையளிப்பதாகவும் வர்த்தகர்கள் விலையுயரும் போது எந்தவித மனசாட்சியும் இன்றி உயர்த்தி விடுவதாகவும் ஆனால் குறைந்தால் மாத்திரம் கூடிய விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்து வருவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்.