இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்த தீபாவளிப் பண்டிகை கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்ப உறவுகளும், இனங்களுக்கிடையாலான அன்னியோன்னியமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு கொரோனா என்னும் கொடிய நரகாசுரனை ஒழிக்க நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
நாட்டில் கொரோனாவின் தாக்கம் மற்றும் விலைவாசி ஏற்றம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகைகளும் களையிழந்து காணப்படுகின்றன. குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போதுமான வேலை நாட்கள் இன்றி பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். தோட்ட நிர்வாகங்களின் சுரண்டல், கெடுபிடிகள், அடக்கு முறைகள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாகவே சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மீண்டும் கட்டியெழுப்புவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்து உட்பட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதனால், கொரோனா முற்று முழுதாக நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டதாக எண்ணிவிடக் கூடாது. பண்டிகை காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா அபாயத்திலிருந்து நாடும் மக்களும் விடுபட்டு விரைவில் சுபிட்சம் பெருக வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.



