கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் நுவரெலியா பாரிய பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளதாகத் தெரிவித்த நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், எனவே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நுவரெலியாவைப் பாதுகாப்பதற்கு பொதுமக்கள் மீண்டும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கோரினார்.
ஊடகங்களுக்கு (28) அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நுவரெலியா பிரதேசத்துக்கு சித்திரை புதுவருடத்துக்காகவும் ஏப்ரல் வசந்தகால நிகவுகளைக் கண்டுகளிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்ற பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு வருகை தந்தவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கிய வீடுகள் மற்றும் விடுதிகள், உல்லாச ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர், கொரோனா தொற்று தொடர்பில் தமக்கு நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இவர்கள் தமது சுயத்தனிமைகளைப் பேணுமாறும் வலியுறுத்திய அவர்,
கொரோனா தொற்று மூன்றாவது அலை மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், நுவரெலியா இவ்வலையில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் அதிகமாகவுள்ளனவெனத் தெரிவித்த அவர், வசந்தகால நிகழ்வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதற்கு, மக்கள் தவறிவிட்டனர் எனவும் இதனால், இன்று நுவரெலியா முடக்கப்படும் அச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் செயற்பாடுகளில், பொது சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனரெனத் தெரிவித்த அவர், நுவரெலியா பிரதேச சபையால், நேற்று (28) முதல் அனைத்து பிரதேசங்களிலும் தொற்று நீக்கிகளை தெளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், ஹக்கலை, கந்தேஎல்ல, பொரலந்தை, கந்தப்பளை, நானுஓயா, அம்பேவளை, பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகள், விடுதிகள், ஹோட்டல்கள், பொது இடங்களுக்கு மிக விரைவாக தொற்று நீக்கிகளைத் தெளிப்பதற்கு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், நுவரெலியாவுக்கு அனாவசியமாகப் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள வேண்டுமெனவும், வேலு யோகராஜ் தெரிவித்தார்.
டி சந்ரு