கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பெருந்தோட்டப் பகுதி மக்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கினிகத்தேனை கடவளை தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு முகக் கவசங்களை வழங்கி வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் வழிநடத்தலில் இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவர் பா. சிவனேசன், பிரதேச அமைப்பாளர் பிரபு, தோட்ட இளைஞர்கள் சார்பாக காளிதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
கடவளை தோட்டத்தில் இரண்டு தோட்டக் குடியிருப்புகள் சேர்ந்தவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மூலமாக தோட்டத்தில் வாழுகின்ற ஏனையவர்களுக்கும் கொரோனா தொற்று பரவாமலிருப்பதற்காக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் பெருந்தோட்ட பகுதி மக்களும் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்