” மலையக மக்களுக்கு சேவையாற்றுவதும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதுமே காங்கிரஸின் பிரதான நோக்கம். கல்வி புரட்சி மூலமே எமது சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது. எனவே, எமது இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம். கொள்கையற்ற சிலரே எமது பயணத்தை விமர்சித்து. பாதையில் முற்களை விதைக்க முற்படுகின்றனர்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி பன்வில – ஹாத்தல கீழ் பிரிவு மற்றும் கெலாபொக்க சோலங்கந்த ஆகிய தோட்டப்பகுதிகளில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட் பாதை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தலைமையில் நடைபெற்றது. இதன் போது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து நாம் தலைதூக்க ஆரம்பிக்கும்போது, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலும் எமது பொருளாதாரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை உச்சம் தொட்டுள்ளது. இப்படியான நெருக்கடிகள் இருந்தும் மலையகத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை நாம் கைவிடவில்லை. அவை உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு அப்பால் கல்வித்துறை எழுச்சியே எமது பிரதான இலக்கு. அத்துடன், சுகாதாரம், விளையாட்டு மற்றும் சுயதொழிலும் ஊக்குவிக்கப்படும். இவை சமாந்தரமாக இடம்பெற்றால் நிச்சயம் எமது சமூகம் மாற்றம் காணும். அந்த இலக்குடன்தான் ஜீவன் தொண்டமான் தலைமையில் காங்கிரஸ் தற்போது பயணித்துக்கொண்டிருக்கின்றது.
நாங்கள் வலிகளை தாங்கிக்கொண்டாலும் மக்களுக்கு சுகங்களை கொடுக்கவே முயற்சிக்கின்றோம். அப்படி இருந்தும் சிலர் எம்மீது விமர்சனக் கணைகளைத் தொடுக்கின்றனர். எமது பாதையில் முற்களை விதைக்க முற்படுகின்றனர். எமக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, பயணத்துக்கு தடையாக இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)