அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் பச்சைபங்களா தோட்டத்தில் குளவிகளின் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் கடும் பாதிப்புக்குள்ளான 6 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (05) திகதி காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் களைந்து சரிமாறியாக கொட்டியதில் பாதிப்புக்குள்ளான இரண்டு ஆண்களும் நான்கு பெண்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இது குறித்து தோட்டத் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்…..
தமக்கு தோட்ட நிர்வாகத்தால் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் தொழில் செய்வது பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் குளவிக் கொட்டுக்கு இலக்காகும் போது வாகன வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்றும் தேயிலை மலைகளில் கட்டப்பட்டுள்ள குளவி கூடுகளை அப்புற படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தோட்ட நிர்வாகம் 20 கிலோகிராம் தேயிலை கொழுந்தினை மாத்திரம் கேட்பதாக தொழிலாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே தமக்கு முறையான பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்