கொழும்பில் சி.சி.ரி.வி. கண்காணிப்பில் 12 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல்கள் பதிவு!

0
72

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸாரினால் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில், 12,918 போக்குவரத்து விதி முறை மீறல்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பில் சிசிரிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்மூலம், போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் காணொளி ஆதாரங்கள் நாடளாவிய ரீதியிலுள்ள சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அபராதம் அளிக்கப்பட்ட குற்றச் சீட்டு சாரதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த செயல்முறையை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வதற்கும் பிரைமா மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிரைவேட்) நிறுவனத்தால் செவ்வாய்க்கிழமை (21) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ‘போக்குவரத்து மீறல் முகாமைத்துவ மென்பொருளை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் போக்குவரத்து விதிமீறல்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் என்.பி. லியனகே, சிசிரிவி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி. கமலத், பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க மற்றும் ஏனைய உயர் பொலிஸ் அதிகாரிகள், பிரைமா முகாமைத்துவ நிறுவனத்தின் பொது முகாமையாளர் கிரிஷாந்த பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய மென்பொருள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையை செயல்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மென்பொருளில் பொலிஸ் அதிகாரிகள் வாகன எண் மற்றும் குற்றத்தின் வகையை மட்டுமே உள்ளிட வேண்டும், அதன் பிறகு அபராதம் அளிக்கப்பட்ட சீட்டு வழங்குவதற்காக தொடர்புடைய பொலிஸ் நிலையத்திற்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

குற்றம் நடந்த இடத்தில் சாரதி இல்லாவிட்டால், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அபராதத்தை செலுத்தலாம்.

மென்பொருள் மூன்று உத்தியோகபூர்வ மொழிகளிலும் தகவல்களை வழங்குகிறது.

முறைமையில் ஒரு குற்றம் நுழைந்தவுடன், சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அதை அகற்ற முடியாது, மீறல்களைக் கையாள்வதில் முழு பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், போக்குவரத்தை கண்காணிக்கும் திறனை மேம்படுத்தவும், குற்ற விசாரணைகளில் உதவவும் முக்கிய பகுதிகளில் சிசிரிவி கமராக்களை நிறுவுவதை விரிவுபடுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here