கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

0
7

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.

ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here