தற்போது பல அரச வைத்தியசாலைகளில் காணப்படக்கூடிய மருத்துவ உபகரணங்கள் பழுதடைவதன் காரணமாக நோயாளர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள எக்ஸ்ரே இயந்திரங்கள் இரண்டும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கதிரியக்க பரிசோதனைக்கு அனுப்புவது இன்றியமையாதது என்பதால், தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை வைத்தியசாலையின் வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டியுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதான எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்ததாகவும் அதன் பின்னர் இரண்டாவது இயந்திரத்தின் மூலம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குள்ள பிரதான எக்ஸ்ரே இயந்திரம், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பரிசோதனை அறிக்கைகளை வார்டுகளுக்கும், அறுவை சிகிச்சை மையங்களுக்கும் , வைத்தியருக்கும் சில நொடிகளில் அனுப்பும் திறன் கொண்டமை குறிப்பிடத்தக்கது.