கொவிட் இறப்புகள் மீண்டும் சடுதியாக உயர்வு

0
181

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மேலும் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (26) இடம்பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,674 ஆகும்.

உயிரிழந்தவர்களில் ஒன்பது பெண்களும் 11 ஆண்களும் அடங்குவர்.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 425 நோயாளிகள் இன்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் மொத்தமாக கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 538,186 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றில் இருந்து 373 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 26 நாட்களில் 2,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதம் கொழும்பு மாவட்டத்தில் 856 பேரும், கம்பஹாவில் 476 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 209 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு மற்றும் டெங்கு இரத்தப்போக்கு முகாமைத்துவ விசேட வார்டு 2ல் உள்ள 21 படுக்கைகளும் தற்போது நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்தியர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீடுகள் மற்றும் ஏனைய வளாகங்களில் சோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கு சொந்தமான உரிமையாளர்கள் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here