கல்வி பொதுத்தராதரபத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையவில்லை என நிரூபித்தால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
அரசியல் சூழ்நிலை குறித்து நாடாளுமன்றில்தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஒத்திவைப்பு வேளை பிரேராணை மீதான விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வி குறித்தும் ஆட்சியின் தன்மை குறித்தும் விளக்க உரை ஆற்றி கொண்டிருந்த விமல் வீரவங்ச, நாட்டை ஆட்சி செய்ய தேசிய அரசாங்கத்திற்கு தகுதியில்லை என உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் மக்களே உணர்தியுள்ளனர் என குறிப்பிட்டார்.
ஆகையால் தொடர்ந்து ஆட்சி செய்யும் கனவை கைவிட்டு வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்குமாறும் கேட்டு கொண்டு சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து அமர்ந்தார் விமல் வீரவங்ச.
இதனை தெடர்ந்து விவாதத்திற்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது பாரதூரமான கருத்துக்களை முன்வைத்தார்.ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அறிக்கையொன்றை வெளியிட்டார் எனவும், குறித்த அறிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி தனித்து செயற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என செய்திகள் வெளியாகியுள்ளதாக தனது கையடக்க தொலைபேசியை பார்த்தவாறு ஆவேசத்துடன் கருத்துக்களை முன்வைத்தார்.
இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவங்ச கையடக்க தொலைபேசியில் திரைப்படங்களை பார்த்துக்கொண்டு சமகால அரசியல் தொடர்பில் கருத்துரைக்க வேண்டாம் என கேளிக்கையாக தெரிவித்ததை தொடர்ந்து, சினம் கொண்ட ராஜித சேனாரத்ன, “விமல் வீரவங்சவை பார்த்து உங்களுக்கு தொழில்நுட்பம் பற்றிய அறிவு இருக்கின்றதா?
சாதாரண தரம் வரை பயின்ற உங்களுக்கு எவ்வாறு தொழில்நுட்ப அறிவு இருக்க கூடும்.தாம் சாதாரண தரத்தினேலும் சித்தியடையவில்லையே” என முகத்துக்கு முகம் பரிகாசம் செய்தார் ராஜித சேனாரத்ன.இதன்போதே கல்வி பொதுத்தராதரபத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையவில்லை என நிரூபித்தால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆவேசமாக பதிலளித்தார்.