நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் மலையகத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும் அதற்கு அச்சாணியாக உழைத்த ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனரும் ஜனாதிபதி செயலகத்தின் உறுப்பினருமான எஸ் கே சந்திரசேகரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…..
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப்பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பெரும்பாலான மலையக பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளமை எமது பிள்ளைகளின் சிறந்த கல்வி வளர்ச்சியை காட்டுகிறது.
கடந்த 2020 ஆண்டு முழுவதும் கொவிட் வைரஸால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர்களின் உன்னதமான செயல்பாடுகளின் ஊடாகவும் மாணவர்களின் கடும் முயற்சியால் அதிகூடிய பெறுபேறுகளை அடையமுடிந்தது.
இதேவேளை பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் மாணவர்கள் கல்வியை கற்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்த ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
எமது சமூகத்தின் விடிவு கல்வியில் தான் தங்கியுள்ளது . ஆர்வத்துடன் சாதாரண தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்றது போல் உயர்தரத்திலும் சிறந்த முறையில் பெறுபேறுகளை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கே.சுந்தரலிங்கம்.



