ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் C 4 ரக வெடிமருந்துகளை லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது லொறியில் இருந்து 156.07 கிராம் நிறையுடைய C4 ரக வெடிமருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
C4 ரக வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளில் ஒன்று என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிமருந்துகளை கந்தளாயிலிருந்து தென் பகுதிக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
வெடிமருந்துகளை கடத்திச் செல்வதற்கான காரணம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.