சந்தாவை விட தொழிலாளர்களின் நலன்களே முக்கியம்.

0
175

தோட்டத் தொழிலாளர்களின் சந்தாவை நிறுத்துவதன் ஊடாக தொழிலாளர்களையோ தொழிற் சங்கங்களையோ அச்சுறுத்த முடியாது. சந்தாப்பணம் கிடைக்காவிட்டாலும் எமது தொழிற்சங்கப் பணிகள் என்றும் போல் தொடரும்.

எமக்கு தொழிற்சங்க சந்தாவை விட தோட்டத் தொழிலாளர்களின் நலன்களே முக்கியமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

தொழிலாளர்களின் சந்தாவை தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கும் வழக்கமான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் நிறுத்தியுள்ளன. இந்த செயற்பாட்டின் ஊடாக தொழிலாளர்களையோ தொழிற்சங்கங்களையோ அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என்பதை கம்பனிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் எமது தொழிற்சங்க உரிமையை விட்டுக் கொடுக்கவும் முடியாது.

சந்தாவை விட எமக்கு தொழிலாளர்களின் நலன் தான் முக்கியம்.
தொழிலாளர்களின் உரிமையை பறிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
சந்தாவை நிறுத்தி தொழிலாளர்களை அடக்கவும், தொழிற்சங்கங்களை முடக்கவும் கம்பனிகள் முயற்ச்சிக்கிறார்கள். சந்தாவிற்காக தொழிலாளர்களின் உரிமையை விட்டு கொடுக்கமுடியாது.

சந்தாவை நிறுத்தினாலும் எமது தொழிற்சங்கத்தின் வழமையான பணிகளை முன்னெடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
அதேநேரம், தொழிற்சங்க உரிமையைப் பறிப்பதற்கு இடம் கொடுக்கவும் முடியாது. தொழிற்சங்க சந்தாவை நிறுத்துவதன் மூலம் வேலைப் பளுவை அதிகரித்து அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகளைக் குறைத்து தொழிலாளர்களை ஆட்டிப் படைத்து அடக்கி வைக்கவும், தொழிற்சங்க கலாசாரத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று அவற்றை முடக்கி வைக்கவும் கம்பனிகள் கனவு கண்டு வருகின்றன.

தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்து பிளவுகளை ஏற்படுத்தி குளிர் காயலாம் என்று முதலாளி வர்க்கம் எதிர்பார்க்கின்றது. ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கி தொழிற்சங்க உரிமையைப் பறிப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அதற்காக அற்ப சொற்ப சலுகைகளுக்கு விலைபோகவும் மாட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் வழமைக்கு மாறாக 20 கிலோ கொழுந்தை பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதோடு, ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்தால் ஒன்றரை பேர் வழங்க வேண்டும் என்று தொழிற் சட்டத்தில் இருக்கும் போது, தொழிலாளர்கள் பறிக்கின்ற ஒவ்வொரு கிலோவுக்கும் 50 ரூபா வீதம் வழங்கி தோட்ட நிர்வாகங்கள் தொழிற் சட்டத்தை மீறி அநீதி செய்கின்ற நேரத்தில் கம்பனிகளுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர்களை காட்டிக் கொடுத்து அடகு வைக்கும் வகையில் சில தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் சந்தாப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒருபோதும் தொழிலாளர்களுக்கு எதிரான கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு துணை போகாது. தொழிற்சங்க உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க நாம் போராடவும் தயங்க மாட்டோம் என்பதை தொழிலாளர்கள் அறிவார்கள். மாதாந்த சந்தாப் பணம் நிறுத்தப்பட்டாலும், சந்தாப் பணத்தை விட தொழிலாளர்களின் நலன்களே முக்கியமானது என்ற அடிப்படையில் வழமையான எமது தொழிற்சங்கப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

சோ. ஸ்ரீதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here