நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கி சாதனை படைக்கும் நிலைக்கு வித்திட்டவர் ஒரு தமிழர் என்பது தெரியவந்துள்ளது.தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானியே அவராவார்.
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் திகதி இவர் நியமிக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு, வீரமுத்துவேல் விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை எழுதியிருந்தார். அவரது ஆய்வு கட்டுரை தொடர்பாக பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது.இதுவே வீரமுத்துவேலை 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கிய பங்காற்றினார்.
இவரது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 3 நிலவை நோக்கிய தனது பயணத்தை திட்டமிட்டப்படி மேற்கொண்டுவருவதாக வீரமுத்துவேல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இடம்பெற்றது தமிழர்களிடையே பெருமையை சேர்த்துள்ளது.