சம்பள போராட்டம் – ஸ்தம்பிதமானது தலவாக்கலை நகரம்…

0
227

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் படி கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று 23.09.2018 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல கட்சி முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி தலவாக்கலை கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது.

நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சென்றதை இதன்போது காணக்கூடியதாக இருந்தது.

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு தலவாக்கலை நகரவாசிகள் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஆதரவினை வழங்கியமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here