சலுகைக்காக இனியும் ஏமாற மாட்டோம், உரிமைக்காக அணிதிரள்வோம்

0
65

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து மலையகப்பகுதியில் குடும்பப்பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பல குடும்பங்கள் இன்று அன்றாட உணவுகளைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். பல குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வித்தேவையினைப் பூர்த்தி செய்ய முடியாது இடர்பட்டு வருகின்றனர். குடும்ப சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு பலபெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று சொல்லண்ணா துயரங்களை அனுபவித்து நாடுதிரும்புகின்றனர்.

இதனால் இன்று குடும்பங்கள்; மகிழ்ச்சியும் நிம்மதியுமற்ற நிலையில்தான் உள்ளன. ஆனால் எமது மக்கள் பிரதிநிதிகளால் வருடமொருமுறை மார்ச் 8 ஆம் திகதியினை மகளிர் தினத்தினை கொண்டாடிவிட்டு அவர்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளனர் என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் பெண்கள் இன்று (23.02.2024) அட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.

அவர்கள் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காலம் காலமாக எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் வரும்போது உங்களுக்கு வீட்டுரிமை பெற்றுத்தருகிறோம் காணியுரிமைப் பெற்றுத்தொருகிறோம் 100 பேருக்கு தொழில்வாய்ப்பு 500 பேருக்கு சுயதொழில், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்போம் என்றெல்லாம் சொல்லி எம்மை காலம் காலமாக ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் எத்தனை பேருக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? கேட்டால் இப்போது எங்கள் கட்சி ஆட்சியில் இல்லை ஆட்சியில் இருந்தால் உங்கள் பிரதேசம் இந்த வேலைத்திட்டத்திற்கு அடங்கவில்லை என்றெல்லாம் தெரிவிக்கிறார்கள்.

இனியும் நாம் ஏமாற தயாரில்லை இம்முறைத்தேர்தலுக்கு வருவதற்குமுன் எங்களுக்க உரிமைகளையும் பொருளாதாராத்துக்கு தீர்வினையும் பெற்றுக்கொடுத்துவிட்டு வாருங்கள். அப்போது வாக்களிப்பதைப்பற்றி யோசிப்போம் என தெரிவித்தார்.
இதுகுறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் 35000 ஹெக்டேயார்ஸ் தரிசுநிலங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்கள். ஏன் அந்த தரிசு நிலங்களை மலையகப்பெண்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. கோழி வளர்ப்பதற்கு அல்லது ஆடு வளர்ப்பதற்கு இந்த நிலங்களை பிரித்துப் பெற்றுக்கொடுத்திருக்கலாம் அல்லது இந்த நிலங்களில் சுயதொழில் செய்வதற்கான தொழிற்சாலைகளை ஏற்படுத்தியிருக்கலாம். இவை எதனையும் செய்யாது வெட்டி வார்த்தைகளை பேசி காலத்தை வீணடிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் எதிர்வரும் 8 ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. ஒருநாள் நினைவுகூர்ந்து விட்டு வாழ்நாள் முழுவதும் அழும் நிலையில் மலையகப்பகுதிகள் இன்றும் காணப்படுகின்றன. ஆகவே இந்நிலை மாற வேண்டும் மலையகத்தில் இருக்கின்ற குடும்பங்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சரியான வேலைத்திட்டங்களை இந்த மக்கள் பிரதிநிதிகள் இந்த மகளிர் தினத்தில் அறிவிக்கவேண்டும் இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக பெண்கள் அணிதிரள்வது எவராலும் தடுக்கமுடியாது எனவும் எதிர்வரும் காலங்களில் வாக்களிப்பதையும் தவிர்க்கப்போவதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here