நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளின் போது பார்வையை இழந்த 23 பேரின் பார்வை வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருக்கு சென்றுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தொலைபேசி மூலம் சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவிற்கு கடந்த 17ஆம் திகதி சிகிச்சைகளுக்காக வருகைத் தந்த 23 பேருக்கு சிகிச்சைகளின் பின்னர் திடீரென பார்வை இழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பார்வையை இழந்த 23 பேரும் வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த நோயாளர்களுக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படும் ஊசியினாலேயே இவ்வாறு பார்வை இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோயாளர்களுக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படும் ஊசி தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்க எமது செய்திப் பிரிவிற்கு குறிப்பிட்டார்.